கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் கோடானகோடி பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீராடியதால் தங்களுக்கு ஏற்பட்ட கருமை நிறம் நீங்க வேண்டி சிவபெருமானிடம் பிரார்த்தித்தபோது, மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் அருளியதாக வரலாறு. பிரசித்தி பெற்ற காவிரி துலாக் கட்டத்தின் தென்கரையில் மாயூரநாதர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்தும், வடக்கு கரையில் வதான்யேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி காவிரியின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளி ஐப்பசி மாதம் 30-ஆம் நாள் நடைபெறும் கடைமுகத்தீர்த்தவாரி உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த உற்சவத்துக்காக காவிரியின் தெற்கு கரையில் பிரத்தியேக தீர்த்தவாரி மண்டபம் உள்ள நிலையில், வடக்கு கரையில் திறந்தவெளியில் உற்சவமூர்த்திகள் நிறுத்தப்பட்டு விழா நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வடக்கு வரையில் புதிதாக வணிக வளாகத்துடன் கூடிய தீர்த்தவாரி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய மண்டபத்தில் குழுக்காட்சியில் அமர்ந்த ஆதீனத்துக்கு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், நகராட்சி துணைத் தலைவர் குமார், ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், முன்னாள் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல்,உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



