தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர் – முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப் பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர்.
தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. கீழ ரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேருக்கு முன்பாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் நடந்தது.
தேரோட்டத்தில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி,கோவில் தலைமை பட்டர் செல்வம், ஸ்ரீசுப்ரமணியசுவாமி மகமை பரிபாலன சங்கம் செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, சண்முகம் சுப்பிரமணியன், சங்கர், தொழிலதிபர்கள் டி.ஏ.தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர். இ.பி பழனியப்பன், ஏவிஎம் முத்துராஜ், அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, மந்திரமூர்த்தி, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலகுருசாமி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு ரத வீதி மேற்கு ரதவீதி. வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் குளிர்பானம், மோர், தயிர், விசிறி வழங்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் கமலஹாசன் ஜுவல்லர்ஸ் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



