விளாத்திகுளம், டிசம்பர் 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துவரந்தை கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் அதை கிராமத்தைச் சேர்ந்த தனிநபர்கள் சர்வே எண்-127/2-ல் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கட்டுமான பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து கால தாமதம் இருந்து வருகிறது. இதனால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி மனு அளித்தனர். ஆனால் பல மாதங்களாகியும் தற்போது வரை தனிநபர்களின் ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தங்களது கோரிக்கையான தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி பல மணி நேரங்களாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை கிராமத்திற்கு நேரில் சென்று நில அளவீடு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றி தரப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



