விளாத்திகுளம், டிசம்பர் 12 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட 1-வது வார்டு சத்யாநகர் பகுதி இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அம்ரூத் 2.O கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே பைப் லைன் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை தற்போது வரை சரி செய்யாமல் உள்ளது.
இதனால் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாக்கடை நீரிலும், மழை நீரிலும் சேற்றிலும்,சகதியிலும் நடந்தும், வாகனத்தில் கடந்தும் செல்லும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் முதியோர் என பலர் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து கூறுகையில்: விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அம்ரூத் 2.0 திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யப்படாமல் தற்போது வரை பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக்கொண்டு சத்யாநகர் சாலை பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



