திருவாரூர், நவம்பர் 24 –
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் மருத்துவருக்கு திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆதனூர் கிராமம் தாமரைக்குளத்தை
சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ஆர்த்தி (32). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கருவுற்றிருந்த நிலையில் 7 மாதங்களில் குறைப்பிரசவமாகி குழந்தை இறந்து விட்டது.
பிறகு 2024 மே மாதத்தில் மீண்டும் கருவுற்றார்.
அப்போது மன்னார்குடி நடேசன் தெருவில் இயங்கி வரும் தனியார் நர்சிங் ஹோம் ஒன்றில் பெண் மருத்துவர் ஒருவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மாதா மாதம் ஸ்கேன் செய்து குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்து, குழந்தை வளர்ச்சி நன்றாக இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆர்த்தியும் அவரது
கணவர் பார்த்திபனும் மருத்துவரிடம் தங்கள் முந்தைய குழந்தை 7 மாதத்தில் பனிக்குடம் உடைந்து குழந்தை இறந்து போனதால் மீண்டும் கருவுற்றால் கர்ப்பப்பையில் தையல் போட வேண்டும் என்று முந்தைய மருத்துவர் சொன்ன விபரத்தை கூறியுள்ளனர். மூன்றாவது மாதத்தில் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு தேவைப்பட்டால் தையல் போடலாம் என்று தற்போதைய மருத்துவர் கூறியுள்ளார்.
பிறகு மூன்றாவது மாதம் குழந்தை வளர்ச்சி நன்றாக இருப்பதால் தையல் போட
தேவையில்லை என்று கூறிவிட்டார். தொடர்ந்து 4, 5 மற்றும் 6வது மாதத்திலும் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை நன்றாக உள்ளதென்று தெரிவித்துள்ளார். பிறகு 10.12.2024 அன்று அதிகாலையில் கடும் வலி ஏற்பட்டதையடுத்து ஆர்த்தியை சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்
பனிக்குடம் உடைந்து விட்டது.
இனி தங்களால் ஒன்றும் செய்ய முடியாதென்று கூறியதையடுத்து தஞ்சை அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் காலை குழந்தை பிறந்து அன்று மதியமே இறந்து விட்டது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆர்த்தி வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்பே ஒரு முறை கருச்சிதைவு நடந்த விபரத்தைக் கூறி மனுதாரர் பலமுறை வலியுறுத்தியும் நடேசன் தெரு தனியார் நர்சிங் ஹோம் பெண் மருத்துவர் தையல் போட்டு முறையான சிகிச்சை அளிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக அமைந்து விட்டது. ஆர்த்திக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறை தீர் ஆணையத் தலைவர் மோகன்தாஸ் மற்றும் உறுப்பினர் பாலு ஆகியோர் உத்தரவிட்டனர்.


