சிவகங்கை, ஏப்30
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை அடுத்துள்ளது கண்டிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அறக்கட்டளையின் தலைவர் கதிரவன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
சிவகங்கை மாவட்டம் , காளையார்கோவில் தாலுகா , நாட்டரசன்கோட்டை பிர்காவிற்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களிலும் அதிகளவு சீமைக் கருவேல் மரங்கள் வளர்ந்திருந்தது . பொதுவாக இந்த மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாயை ஏற்படுத்துவது சட்டபூர்வ நடவடிக்கை ஆகும் .
ஆனால் இந்த நடைமுறைகளை தற்போதைய காளையார்கோவில் தாசில்தார் பின்பற்றாமல் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவேல் மரங்கள் வெட்டப்பட்டு அதன் விறகுகல் கிராம நிர்வாக அலுவலர்களின் மறைமுக உடந்தையோடு தனக்கு வேண்டியவர்கள் மூலம் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுள்ளது . இந்த முறைகேடு தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் முகாமிலும் , விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் , முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் , புகார் மனு செய்துள்ளேன் .
இந்நிலையில் கடந்த 29.01.2025 ம் தேதியிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கையை சாதகமாக பெற்றுக்கொண்டு தற்போதைய சிவகங்கை கோட்டாட்சியர் அவர்கள் அனுப்பியுள்ள பதில் மனுவில்:
சீமைக் கருவேல் மரங்கள் வெட்டப்படவில்லை . அதிகாரிகள் நிதி இழப்பை ஏற்படுத்தவில்லை என உண்மைக்கு புறம்பான பதிலை கடிதத்தில் துணிச்சலாக தெரிவித்துள்ளார் . எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோட்டாட்சியரின் தவறான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் . மேலும் நாட்டரசன்கோட்டை பிர்க்கா மற்றும் கெளரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கண்மாய் பகுதிகளையும் அதில் உள்ள விறகுகளின் தன்மையையும் கள ஆய்வு செய்ய வேண்டும் . முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்கோவில் தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .