ஆரல்வாய்மொழி பிப் 13
மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவு வாயிலில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டை உடைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் அப்பகுதியில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டினை நிறுவ வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டணம், கருங்கல், புதுக்கடை ஆகிய மேடான பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் கொண்டு செல்லும் விதத்தில் 1969-ம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பரளியாற்றின் குறுக்கே இரு மலைகளை இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலமானது 115 அடி உயரமும், 1 கிலோ மீட்டர் தூரமும் உடையது. 7 அடி ஆழமும், 7.6 அடி அகலமும் உடைய இந்த கால்வாயில் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காகவும், குடிதண்ணீருக்காகவும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என பெயர் பெற்றதாகும். எனவே இந்த பாலத்தை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் இந்த தொட்டி பாலத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக காமராஜரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று தொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டில் மாத்தூர் தொட்டிப்பாலம் கட்டப்பட்ட ஆண்டு, கட்டுவதற்கான செலவு, தண்ணீர் செல்லும் விபரங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில சமூக விரோத கும்பல்களால் இந்த கல்வெட்டு உடைக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மாத்தூர் தொட்டிப்பாலம் இருந்தாலும், அருவிக்கரை ஊராட்சி பாராமரிப்பில் உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டிருந்தால் அதில் கல்வெட்டை உடைத்த மர்ம நபர்கள் பதிவாகி உள்ளார்களா என்பதை ஆய்வு செய்து அந்த சமூக விரோத கும்பலை பாரபட்சமின்றி காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்யாமல் உடனடியாக கல்வெட்டு இருந்த அதே பகுதியில் காமராஜரின் உருவபடம் பொறித்த கல்வெட்டினை அமைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.