தஞ்சாவூர், நவம்பர் 10 –
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை திறம்பட செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி பல்வேறு கட்டங்களாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் கடந்த 4 ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கணக்கெடுப்பு படிவத்தை முறையாக அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறுவது குறித்த பணி முன்னேற்ற கூட்டம் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டர்மான பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியை திறம்பட செய்ய வேண்டும் என அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் உதவி கலெக்டர் ஹிருத்யா எஸ். விஜயன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



