திருப்பூர் மே 1
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்வார விழா நிகழ்ச்சியில் அரசு அலுவலர்களுக்காக கையெழுத்து மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை அறிவிப்பிற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 29.04.2025 முதல் 05.05.2025 வரை தமிழ் வார விழாவாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையே அலுவலக தமிழ்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப்போட்டிகள், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் குறித்த வினாடி வினா நிகழ்ச்சிகள், தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் யாதொரு தயாரிப்பும் இன்றி உடனடியாக பேசும் பேச்சுப் போட்டி, படத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள் / கவிதை வாசிப்புப் போட்டி அலுவலர்களிடையே குறிப்பு எழுதுதல் மற்றும் வரைவு எழுதுதல் போட்டி, கணினித் தமிழ் தொடர்பான போட்டிகள், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வகைப்பாடுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையே நடைபெற்ற வினாடி வினா மற்றும் கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தா. கிறிஸ்துராஜ், பரிசுகளை வழங்கினார்கள். ஆட்சித்தலைவர்
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (தமிழ் வளர்ச்சித்துறை) இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.