கோவை ஏப்:06
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்தனர்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் விதமாக இது போன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கோவையை தொடர்ந்து கன்னியாகுமரி, மதுரை மற்றும் டெல்டா மண்டலங்களிலும் இக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குரலை வலுப்படுத்தும் விதமாகவும் சட்டமன்றத்தில் கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் விதமாகவும் இக்கூட்டங்கள் நடத்தப்படுவதாக கூறினார்.
இஸ்லாமிய மக்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக வக்பு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இஸ்லாமிய மக்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். புதிய வக்பு சட்டத்தின் மூலம் அவர்களது வளர்ச்சி உறுதி செய்யப்படும். அதற்கான அங்கீகாரமும் சிறப்பாக கிடைத்துள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர இஸ்லாமிய மக்களுக்கு நூறு சதவீதம் வக்பு சட்டம் உதவும்” என தெரிவித்தார.
தொடர்ந்து,அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,நல்லது நடக்கும் என நம்புகிறோம் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் உள்துறை அமைச்சரை சந்தித்து பல கோரிக்கைகளை முன் வைத்ததோடு அரசியலும் பேசப்பட்டதாக வாசன் தெரிவித்தார்.
தவெக கட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அது புதிதாக தொடங்கிய கட்சி எனவும் அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.