நாகர்கோவில், ஜன. 2 –
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டம் காலை 9.15 மணியில் இருந்து 10 மணிக்குள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழாவில் கலெக்டர் அழகு மீனா தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் 9.35 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அங்கு வந்தார். அவர் தேரின் முன்பு வந்தபோது அங்கு நின்ற இந்து அமைப்பினரும், பக்தர்களும் பாரத் மாதாக்கி ஜே… என உரக்க கோஷமிட்டனர். தொடர்ச்சியாக அவர்கள் கோஷமிட்டபோது, அமைச்சர் சேகர்பாபு பக்தர்களை நோக்கி அமைதியாக இருக்கும் படி கூறினார். இதனால் அமைச்சர் சேகர் பாபுவின் பெயரை கூறி அவருக்கு எதிராக அங்கு நின்ற இந்து அமைப்பினரும், பக்தர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது. அவருடன் நின்ற அமைச்சர் மனோதங்கராஜ், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மற்றும் பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அங்கிருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் மற்றும் பிரமுகர்கள் சற்று முன்பகுதிக்கு சென்றனர். அப்போதும் எதிர்ப்பு கோஷம் எழுந்ததால் பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் தேரை வடம் பிடித்து அவர்கள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் சேகர் பாபுவிற்கு எதிராக தேரோட்டத்தில் பக்தர்கள் கோசமிட்டதும், அவர் பதிலுக்கு பக்தர்களை பார்த்து இது கோயில் வளாகம் இங்கு பக்தியுடன் நடந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார். அமைச்சருக்கு எதிராக பாரத் மாதாகி ஜே என கோஷம் எழுப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



