சிவகங்கை, நவம்பர் 22 –
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவையர் சங்கத்தினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது
மாவட்டத் தலைவர், வேல்முருகன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர், வீரபாண்டி ஆகியோர் தலைமையில் கோட்ட செயலாளர் பெ. மதியரசன், கோட்டத் தலைவர், தேவகோட்டை மு.சிவன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர், சங்கீதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர், கார்த்திக் கண்டன உரையை எழுப்பி பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசிற்கு விடுத்துள்ள கோரிக்கைகள் விவரம்
- களப்பணியாளர்களின் நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைத்திட வேண்டும்.
- நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்ட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும். 2025ஆம் ஆண்டு பதவி உயர்வுக்காக தகுதி பெற்றும் பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவரையும் 2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி தேர்வுப் பட்டியலில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால் நில அளவர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நிலைகளை கருத்தில் கொண்டு உடனடியாக நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- துணை ஆய்வாளர், ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும்.
- நில அளவைத் துறையானது முற்றிலும் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் தொழில் நுட்பப் பிரிவு என்பதால் நிலம் கேட்புத்துறை மற்றும் மக்களின் நேரடி தேவைகளுக்காக செயல்படும் நிலம் சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்வதால் தனியார் துறையின் கீழ் ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்திட வேண்டும்.
- புறஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்.
- விதி திருத்தத்தின் மூலம் நிலஅளவைப் பதிவேடுகள் துறை உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கை விட வேண்டும்.
- நிலஅளவை, நிலப் பதிவேடுகள் பராமரிப்பு, நீதிமன்ற வழக்குகளுக்கான அளவைப் பணி போன்ற சட்டம் மற்றும் நீதிமன்ற நடைமுறைக்கு உட்பட்ட பணிகளை மேற்கொள்ளுவதால் குறுவட்ட அளவர் முதல் வட்டத்துணை ஆய்வாளர்கள் வரை சட்டம் ஒழுங்கு மற்றும் நீதிமன்ற நடைமுறைகளுக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
- புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணி இடங்களை வழங்க வேண்டும்.
- NAKSHA பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு ஒப்படைக்கப்பட்ட சார் ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். NAKSHA பணிகளை தனி ஆய்வாளர் தலைமையில் தனி துணை ஆய்வாளர்கள் குழு மூலம் திறம்பட செய்திடும் வகையில் உத்தரவு வழங்கிட வேண்டும்.
- வருவாய்த்துறையில் புதியதாக பிரிக்கப்பட்டுள்ள குறுவட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்களுக்கு உரிய குறுவட்ட அளவர் மற்றும் கோட்ட ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
- புல எல்லை மனுக்கள் தொடர்பான இணையவழி விண்ணப்பத்தில் முதல் நிலை மற்றும் மேல்முறையீடு நிலை தொடர்பாக உரிய திருத்தம் கொண்டு
வர வேண்டும். - ஏற்கனவே உட்பிரிவு பட்டாமாறுதல் பணிகள் மூலம் கணினி மூலமாக நடைபெற்ற போதிலும் கைப்பிரதி கோப்புகள் தயார் செய்வதால் இந்த பணியானது இரட்டிப்பாக பெருகியுள்ளது. கணினி மூலம் மட்டுமே பட்டா மாறுதல் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்ற இயக்குநரகத்தின் சுற்றறிக்கையை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



