நாகர்கோவில் மார்ச் 20
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சரித்திர பதிவேடு ரவுடிகளை முறையாக கண்காணிக்க வேண்டும், FIR பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது, குற்றம் நடைபெறும் இடங்களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்,
குற்ற ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்,
கிராம பகுதிகளிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்,
பொதுமக்களுடன் அதிகமாக கலந்துரையாட வேண்டும்,
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,
குற்றவாளிகளிடம் தேவையற்ற தொடர்பில் இருக்கக் கூடாது ,
லஞ்சம் வாங்காமல் நேர்மையாக மக்கள் பணி செய்ய வேண்டும், என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு குற்ற வழக்கறிஞர்கள், போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மண்டைக்காடு பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், குற்றவாளிகளை கைது செய்தல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் என ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையமாக தக்கலை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேடயம் வழங்கினார். அதனை தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் கிறிஸ்டி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாதந்தோறும் ஒவ்வொரு காவல் நிலையத்தின் சிறந்த செயல்பாடுகள் மற்றும் காவல் அதிகாரிகளின் தனிப்பட்ட சிறந்த செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மேலும் மருத்துவத்துறை, குழந்தைகள் நல அலுவலர், அரசு குற்ற வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.