நாகர்கோவில், ஜூன் 3:
தமிழ்நாட்டில் 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடந்தது. அதனைப் போன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு தேர்வுகள் ஏப்ரல் 7 முதல் 17ம் தேதி வரை நடத்தப்பட்டது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை தேர்வு நடந்தது. பின்னர் ஏப்ரல் 25ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்படுவதை யடுத்து மாணவ, மாணவியருக்கு விநியோகம் செய்ய பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. வகுப்பறைகள், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. வர்ணம் பூசும் பணிகளும் நடந்து முடிந்தது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவ, மாணவியருக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று மாணவ மாணவியர் வகுப்புகளுக்கு உற்சாகத்துடன் வருகை தந்தனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் முழுமையாக நேற்று வகுப்புகள் தொடங்கப்படவில்லை. சில பள்ளிகள் வரும் 9ம் தேதி திறக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒன்றாம் வகுப்பிற்கு குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து பள்ளிகளில் கொண்டு சேர்த்தனர். அழுது கொண்டிருந்த குழந்தைகளை ஆசிரியர்கள் பூங்கொத்து, விளையாட்டு பொருட்கள், சாக்லேட் போன்றவற்றை கொடுத்து ஆசிரியர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
குமரி மாவட்டத்தில் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளே மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பாட புத்தகங்கள் வழங்கினர். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் மக்களின் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது