மார்த்தாண்டம், பிப்- 8
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதுகெலும்பு போல ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை முறையான பராமரிப்பு பணிகள் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சீரமைக்கப்பட்டாலும் அதிவேகத்தில் செல்லும் கனக வாகனங்களால் இந்த சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகின்றன.
பல இடங்களில் மரண குண்டு குழிகள் காணப்பட்டன. அந்த வகையில் குழித்துறை பகுதியில் கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக தேசிய நெடுஞ்சாலை காட்சி அளித்தது.
இதை அடுத்து தற்போது அந்த சாலை சீரமைக்கப்பட்டபோதும், பொது மக்களின் கேலிக்கு உள்ளாகி உள்ளது. அதாவது டாரஸ் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சாலை சீரமைத்த போது சாலையை மேற்பார்வையிட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைப்புக்கு இடையூறாக நின்ற லாரிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அப்பகுதியை மட்டும் விட்டு விட்டு மீதி இடங்களில் சீரமைத்து விட்டு சென்றுள்ளனர்.
சீரமைக்கப்படும்போது போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படுள்ள வாகனங்களை காவல்துறை உதவியோடு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இந்த சாலை சீரமைத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளது.மக்கள், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.