ராமநாதபுரம், டிச.17-
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் ஆணிவேராம் ஊராட்சி செயலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி வரும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான பணி சார்ந்த உரிமைகளையும் மற்றும் சலுகைகளையும் வழங்கிட அரசின் கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம்.
தமிழக அரசின் ஊதிய குழு பரிந்துரையின் படியான காலமுறை ஊதிய விகிதத்திற்கு வரப்பெற்று இதர அரசு பணியாளர்கள் போல அகவிலைப்படி மருத்துவப்படி வீட்டு வாடகைப்படி பெற்று வரும் நிலையிலும் பணி விதிகளிலும் அரசு பணியாளர்களுக்கான விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முறையான காலமுறை ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கான எவ்வித பணி சார்ந்த உரிமையும் மற்றும் சலுகையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
பதிவறை எழுத்தர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் நிலையில் உள்ள அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் அலுவலகப் பணி மட்டுமே செய்து வருகிறார்கள். ஊராட்சி செயலாளர்கள் பொருத்தமட்டில் அலுவலகப் பணியுடன் களப்பணியும் சேர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இருவகை பணியாளர்களும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் மாத ஊதியம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான ஊதிய விகிதத்திற்கு குறைவான ஊதிய விகிதம் பெரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர்கள் பணியிடத்திற்கான பணி சார்ந்த சலுகைகள் கூட ஊராட்சி செயலாளர்களுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்களை மிகவும் பாதிக்கும் நிலைப்பாடாக உள்ளது.
தமிழக முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள ஊராட்சி செயலர் பணியிடத்தின் முக்கியத்துவத்தினை கருதி ஏற்கனவே ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு இதர முறையான கால முறை ஊதியம் பெரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர்/பதிவறை எழுத்தருக்கு உள்ளது போன்ற அனைத்து பணி சார்ந்த உரிமைகள் மற்றும் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.