ஈரோடு, டிச. 9 –
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பத்திரிகையாளர் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான தொகைகள் நிரணயிக்கப்பட்டும் வெளியிடப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் செய்தியாளர்களின் தன்னலம் கருதாத பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் நலவாரியத்தில், பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக இணைவதற்காக தலைமையிடத்தில் செய்தி வெளியீட்டுப் பிரிவு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பத்திரிகையாளர் நலவாரியத்தில் சரிபார்த்து, உறுப்பினர் சேர்க்கைக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கான ஏராளமான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பத்திரிகையாளர் நலவாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து பயனாளிகளைத் தேர்வுசெய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிட செய்தித் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு, 7 அலுவல்சார் உறுப்பினர்களையும், 6 அலுவல் சாரா உறுப்பினர்களையும் கொண்ட பத்திரிகையாளர் நல வாரியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பத்திரிக்கையாளர் நலவாரிய உறுப்பினர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பித்து மேற்கண்ட அரசு நலதிட்டங்களை உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


