போகலூர், நவ.24-
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் முத்துவயல் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சபரி வேணி சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பத்மநாதன் தீர்மானங்கள் வாசித்தார்.
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி மக்களிடம் பேசுகையில்:
முத்துவயல் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்களின் நல் ஆதரவோடு சிறப்பாக செய்து வந்தேன். சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலுவலர்கள் குறிப்பாக நம் ஊராட்சி மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது முத்து வயல் ஊராட்சிக்கு தனி வருவாய் கிராமம் ஆக உயர்த்த வேண்டும் என்ற மக்களுடைய கோரிக்கையை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், பரமக்குடி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அந்த கோரிக்கை இதுவரை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது சற்று வருத்தமாக உள்ளது. தற்போது இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முத்துவயல் ஊராட்சியில் தனி கிராம நிர்வாக அலுவலர் நியமித்து மக்கள் சிரமமின்றி பயன்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள நிலையில்
முத்துவயல் ஊராட்சியில் உள்ள மக்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழக்கோட்டை ரெவென்யு குரூப்பில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தான் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கும் சென்று வருகின்றனர். கீழக்கோட்டை ரெவன்யூ குரூப்பில் நான்கில் ஒரு பங்கு மட்டும்தான் அங்கு உள்ளது. அந்த ரெவன்யூ குரூப்பில் மீதமுள்ள நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை பெரும்பாலும் முத்துவயல் ஊராட்சியில் தான் உள்ளன. ஆனால் நான்கில் ஒரு பங்கு உள்ள கீழக்கோட்டையில் தான் ரெவன்யூ குரூப் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளதால் முத்துவயல் ஊராட்சி மக்கள் 5 கிலோமீட்டர் நடந்து சென்று வருவாய்த்துறை சம்பந்தமான கோரிக்கை நிறைவேற்ற சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை முத்துவயல் ஊராட்சியில் தனி ரெவின்யூ குரூப் அமைத்து முத்துவயல் ஊராட்சி மக்கள் சிரமமின்றி வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தை முத்துவயல் ஊராட்சியில் நியமிக்க வேண்டும் என்று தற்போதும் கோரிக்கை வைத்துள்ளனர். உங்களின் கோரிக்கையை கண்டிப்பாக நமது மாவட்ட ஆட்சித் தலைவர் நிறைவேற்றித் தருவார் என்று நூறு சதவீத நம்பிக்கை எனக்கு உள்ளது. முத்துவயல் ஊராட்சிக்கு தனி வருவாய் கிராமமாக மாற்றித் தரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ரவி பேசினார்.
கிராம சபை கூட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் திவ்ய பாரதி பற்றாளராக கலந்து கொண்டார்.
வேளாண்மை அலுவலர் வாரமலர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி, வார்டு உறுப்பினர்கள் நாகநாதன் மு.சேது முத்து, இந்து ராணி, சுதா, காளீஸ்வரி காளீஸ்வரி மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக க கலந்து கொண்டனர். சிறப்பான நிர்வாகம் நடத்திய ஊராட்சி தலைவர் ரவி அவர்களுக்கு கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.