போகலூர், அக். 18 –
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான்கு மாதங்களாக பிரேக் இன்ஸ்பெக்டர் பணி காலியாக உள்ளதால் வாகன பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் தொய்வு நிலை நீடிக்கிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வாகன ஆய்வு மற்றும் லைசன்ஸ் வழங்கும் பணி மேற்கொள்வதால் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் வாகன உரிமையாளர்கள் மற்றும் லைசன்ஸ் பெற விண்ணப்பம் செய்வோர் மிகுந்த அலைச்சலும் ஏமாற்றமும் அடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் பரமக்குடி என இரண்டு கோட்டங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகிறது. இதில் பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, போகலூர் உள்ளிட்ட பகுதி சேர்ந்த வாகனங்களுக்கு உரிய அனுமதி வழங்குவது மட்டும் இரு சக்கர நான்கு சக்கர வாகன லைசென்ஸ் பெற விண்ணப்பிப்போர் லைசென்ஸ் பெற வாகனத்தை ஒட்டி காட்டுவதை பரிசோதிப்பது புதிய வாகனங்களை பரிசோதனை செய்து புதிய வாகனங்களுக்கு ஆர்.சி. வழங்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதேபோல் பள்ளி கல்லூரி மற்றும் தனியார் மற்றும் அரசு வாகனங்களுக்கு எப்.சி. பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளும் வழங்கப்படுகிறது. பணியை பரமக்குடியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் பதவியில் அதிகாரி ஒருவர் இருந்து ஆய்வு மேற்கொண்டு உரிய சான்றிதழ் வழங்கி கொண்டு வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இப்பணியில் இருந்த பிரேக் இன்ஸ்பெக்டர் மாற்றமாகி வேறு மாவட்டத்திற்கு சென்று விட்டார். அதன் பின்னர் இங்கு இதுவரை பிரேக் இன்ஸ்பெக்டர் பணி காலியாக உள்ளதால் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பிரேக் இன்ஸ்பெக்டர் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கூடுதல் பணியாக பார்த்து வருகிறார். கூடுதல் பணியாக இருப்பதால் பரமக்குடியில் வாகன பரிசோதனை லைசன்ஸ் எப் சி போன்ற பணிகளை தினசரி ஆய்வு செய்ய முடியாமல் வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே பரிசோதனை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இங்கு கூட்டம் அலைமோதுகிறது.
அதுமட்டுமின்றி வாரத்தில் இரண்டு நாள் என்பதால் ஆய்வுப் பணியில் முழு திருப்திகரமாக பணி நடைபெறுவது போல் தெரியவில்லை. இன்றைய சூழலில் வாகனம் எவ்வளவு அதிகரித்துள்ளது. அதற்கு உரிய உரிமம் வழங்குவதில் எவ்வளவு கவனம் தேவை என்பதை அரசு கருத்தில் கொண்டு பரமக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உடனடியாக பிரேக் இன்ஸ்பெக்டர் பணியில் உரிய நபரை நியமித்து இங்கு வாகனம் தொடர்பான உரிமம் லைசென்ஸ் பரிசோதனை போன்ற பணிகள் தொய்வின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஆய்வு என்று இருப்பதால் புரோக்கர்கள் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


