தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 50 இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நல்லம்பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி பங்கேற்றார். 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் 16 இடங்களிலும் ,மேற்கு மாவட்டத்தில் 34 இடங்களிலும் ஆக மொத்தம் 50 இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வலியுறுத்தியும், திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மணி தலைமை தாங்கினார். நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பத்மா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், ஒன்றிய அவை தலைவர் வீரமணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மணி பேசுகையில்,
தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதமாக வழங்க வேண்டியரூ. 4,032 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால், கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியும் வழங்கவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு சம்பள வழங்க முடியவில்லை. மேலும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளனர். இது போன்ற மத்திய அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் உடனே வழங்க வேண்டும் என்று கூறினார்.



