ஊட்டி. டிச. 11
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிபிளவர், மலைப்பூண்டு போன்றவை அதிகமாக பயிரிடப்படுகின்றன. அதில் கிழங்கு பயிர்களான பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவைக்கு எப்போதும் நிலையான விலை கிடைத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு சுவை அதிகம் என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மண்டி மற்றும் என். சி. எம். எஸ் மண்டிகளில் ஏலம் விடப்படுகிறது. கோத்தகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரை அதிகமாக விளைவிக்கின்றனர். கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு ரூ. 40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த உருளைக்கிழங்கு தற்போது மேட்டுப்பாளையம் என். சி.எம். எஸ். மண்டியில் கிலோ ஒன்று ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது அதாவது 45 கிலோ மூட்டை ராசி கிழங்கு ரூ. 2670 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதேபோல குறைந்தபட்ச விலை ரூ.1470 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கினை பயிரிட்ட விவசாயிகள் பலரும் உருளைக்கிழங்கு அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மண்டிகளுக்கு உருளைக்கிழங்கினை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதிகமான நீர்பனி மற்றும் அதிகமான மழையின் காரணமாக உருளைக்கிழங்கு அறுவடை தடைபட்டிருந்தது. இந்நிலையில் மழை ஓய்ந்த பிறகு தற்பொழுது உருளைக்கிழங்கு பயிரினை விவசாயிகள் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர் . மற்ற மாநிலங்களிலும் தற்போது மழை பெய்வதால் வெளிமாநில உருளைக்கிழங்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.