சிவகங்கை மே:13
சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன் . இவர் எம் .ஜி. ராமச்சந்திரன் பெயரின் அறக்கட்டளையை நடத்தி வருகிறார் . இவர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது :
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய பழனியம்மாள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் , உதவிப் பொறியாளர் ராஜா ஆகியோர் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக கொடுத்த ஊழல் புகார்கள் மீது மேல்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நான் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தேன் .
அதன் பின்பு குற்றம் சுமத்தப்பட்ட மூன்று அதிகாரிகள் மீதும் துறை ரீதியான 17 ( b ) ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எனக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது . மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தணிக்கை பிரிவு மூலம் கடந்த 2020 – 21 இல் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு குடிமைப் பணிகள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதி 17 (b ) ன் படி மாவட்ட ஆட்சியரால் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாளுக்கு 23 . 12. 2023 ல் குற்றச்சாட்டு குறிபாணை வழங்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்காமல் அவையும் நிலுவையில் இருந்து வருகிறது .
இதன் பின்பு பழனியம்மாள் அவர்கள் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் . கண்ணங்குடியில் இவர் தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவை நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்தது . இந்நிலையில் அதே பழனியம்மாளை தனது சொந்த ஊரான தேவகோட்டையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி நியமனம் செய்திருப்பது வேதனையை தருகிறது .
எனவே இவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு குறிப்பானை விசாரணையில் இருக்கும் போது. இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கும் போது சொந்த ஊரிலேயே பணி நியமனம் செய்திருப்பதால் இன்னும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது .
காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் மீண்டும் கிடைத்து இருப்பதால் குற்றச்சாட்டுகள் அதிகமாகவே தொடரும். எனவே இவரின் பணி நியமனம் , மற்றும் பதவி உயர்வு ஆகியவை ஏற்புடையதுதானா ? எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.