ஊட்டி. ஜன. 13
கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். காலநிலை மாற்றம் மீட்டெடுப்பு – பசுமை நீலகிரி 2025 என்ற ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் திட்ட இயக்குனர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே அவர் கூறிய கருத்துக்களாவன –
தற்போது காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெருமளவில் பொது மக்களால் உணரப்படுகிறது. உலக அளவில் 400 கோடி மக்கள் புவி வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒரு ஆய்வு கூறுகிறது. 2030லி ருந்து 2050-க்குள் பூமியில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கூடுதல் மரணங்கள் ஏற்படும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பல்லுயிர்களின் எண்ணிக்கை 1970 லிருந்து 69 சதவீதம் குறைந்துள்ளது. புவி வெப்பத்தின் காரணமாக உள்ளூர் மரங்கள் மற்றும் தாவரங்கள் கார்பனை உட்கொள்ள சிரமப்படும். ஆனால் வெளிநாட்டு தாவரங்கள் அதிக அளவிலான கார்பனை உட்கொண்டு அதிவேகமாக வளரும். நமது நீலகிரி மாவட்டத்தில் கூட சிஸ்ட்ரம் ரொபஸ்டிகம் எனப்படும் தென் அமெரிக்கா களை செடி யும் லேன்டானம் கேமரா எனப்படும் உன்னி செடியும் மிக வேகமாக பரவி வருவதை காணலாம். நம்மூர் காக்கை கென்யாவில் அந்நிய உயிரினமாக விளங்குகிறது. அங்கு காக்கைகளை ஒழிப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெங்குவை பரப்பும் கொசு கூட ஒரு அந்நிய உயிரினம் ஆகும். மேலும் உலக அளவில் காற்று மாசின் அளவு 462 பி பி எம் என்ற அளவை தாண்டி உள்ளது. காற்றில் மாசின் அளவு அதிகபட்சம் 350 பி பி எம் வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் டெல்லியும் அதனை சுற்றியுள்ள ஆறு நகரங்களும் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற ஒரு விஷவாயு சேம்பர் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. சர்வாதிகாரி ஹிட்லர் விஷ வாயு சேம்பரில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று ஒழித்தது வரலாறு. அந்த வேலையை இப்போது காலநிலை மாற்றம் மேற்கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் மற்றொரு சிக்கல் ஒளி மாசு ஆகும். அரசு அலுவலகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் ஏராளமான மின்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. வியாபார நிறுவனங்கள் கூட ஏராளமான விளக்குகளை மக்களை கவர்வதற்காக பயன்படுத்துகின்றனர். இந்த விளக்கு ஒளியில் வேலை செய்பவர்களுக்கு ரத்த அழுத்தம் 8 புள்ளிகள் அதிகரிக்கும். மேலும் பாலியல் குறைபாடுகளும் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயில் 30% இந்த ஒளி மாசு தான் காரணம் என ஒரு ஆய்வு கூறுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாத வரையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பன போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் கே ஜே ராஜு கூறினார். முன்னதாக ஆசிரியை கீதா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை பிரேமலதா நன்றி கூறினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.