மதுரை, ஆக.28.
பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள எஸ்.டி. மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன் ஒருங்கிணைத்தார். முக்குலத்தோர் நல பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில், PCR மற்றும் SC/ST சட்டங்களின் கீழ் உண்மைத்தன்மையற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், இந்தச் சட்டங்களால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், உச்சநீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளின் சட்டக் கோட்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
PCR மற்றும் SC/ST சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்க தனி சட்ட ஆலோசகர் குழுவை அமைக்கவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களின் குறைகளை ஆய்வு செய்து உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தனி ஆய்வுக் குழுவை அமைக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான பாதுகாப்பும் நீதியும் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் மக்கள் தொடர்பாளர் போஸ் நன்றி கூறினார்.



