ஈரோடு ஜூன்.5-
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மற்றும் பறக்கும் படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசார் மற்றும் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி ஈரோடு மாவட்ட குடிமை
பொருள் வழங்கல் குற்றப்பலனாய்வு துறை போலீஸ் உதவி ஆய்வாளர் மேனகா மற்றும் பறக்கும் படை தனி தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் கோபி அருகே சத்தியமங்கலம் சாலையில் பங்களா புதூர் காவல் சரகம் கொடிவேரி பிரிவு சாலையில் திடீர் என்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் தமிழக அரசின் பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில்
அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோம்பை அரசூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (44) என்பவர் என்றும் அவர் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி சென்று, தனது மீன் பண்ணைகளுக்கு மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் கடத்த டத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் 2200 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற புலனாய்வு துறை போலீசார் கூறும்போது ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி கடத்தப்படுவது பற்றி தகவல் தெரிந்தால் பொது மக்கள் அது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டனர்.



