நாகர்கோவில், டிசம்பர் 12 –
வடமாநிலங்களில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரயில்களில் கஞ்சா தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஜம்முதாவியில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 10ம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் டி1 குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டியில் 2 பேக்குகள் அனாதையாக இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில் மொத்தம் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை போலீசார் கைப்பற்றி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஜம்முதாவியில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் கஞ்சா இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து கூட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்ததும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்தனர். மேலும் ரயில் பெட்டிகளிலும் சோதனை நடந்தது. இதில் ரயிலில் முன்பதிவில் உள்ள பொதுப் பெட்டியில் அனாதையாக பேக் ஒன்று இருந்தது. அதை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை கொண்டு வந்தது யார் என்பது தெரியவில்லை. ரயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் இருக்கையின் அடியில் வைத்துவிட்டு குற்றவாளிகள் தப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கொண்டு சென்றனர்.
சமீப காலமாக வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதமும் 33 கிலோ, 10 கிலோ என தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. கஞ்சா பார்சல்கள் மட்டுமே சிக்குகின்றன. சம்பந்தப்பட்ட நபர் பயணிகளுடன் பயணியாக கலந்து தப்பி விடுகிறார்கள். இவர்கள் நாகர்கோவிலில் தான் தப்பினார்களா? அல்லது பிற பகுதியில் ரயில் நிற்கும்போது தப்பி இருக்கலாமா என்பது மர்மமாக உள்ளது.



