நாகர்கோவில், டிச. 17 –
ஸமஸ்த பஹ்ரைன் தலைவர் அஸ்ஸெய்யிது ஃபக்ருத்தீன் கோயா தங்ஙள் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஸமஸ்த உலமா சபை 100-வது ஆண்டு சர்வதேச மாநாடு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி காசர்கோட்டில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரச்சாரப் பயண தொடக்க விழா நாகர்கோவில் கோட்டார் எம்.டி.பி. மஹால் வளாகத்தில் வைத்து டிசம்பர் 19-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.
சர்வதேச மாநாட்டிற்கு அழைப்பது, கல்வி விழிப்புணர்வு, சமூக ஒற்றுமையை பாதுகாப்பது ஆகியவை இந்த பிரச்சாரப்பயணத்தின் நோக்கமாகும். பிரச்சார பயண தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த பிரச்சாரப் பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை கடந்து செல்கிறது.
திருவனந்தபுரத்தில் நடக்கும் பிரச்சார பயண வரவேற்பு நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார். கோழிக்கோட்டில் நடக்கும் முக்கிய மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது குமரி மாவட்ட தலைவர் அப்துஸ் சலாம் ஜலாலி, செயல் தலைவர் ஷானா வாஸ் கான் ஸ்மதானி, ஒருங்கிணைப்பாளர் யூசுப் ஹுசைன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



