திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது .
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி V.மேனகா விவேகானந்தன் மாணவ , மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
திருப்பத்தூர்:ஜூலை:1, கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கான ஊக்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள் தலைமை தாங்கினார். அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி V.மேனகா விவேகானந்தன், தூய நெஞ்சக் கல்லூரியின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் அரிமா. கிறிஸ்டியானந்தன், புலவர் சம்பத்து ஆகியோர் கலந்துக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் பேசுகையில்: மாணவ மாணவிகள் தங்களின் கல்வியை இளம் வயதிலிருந்தே மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பயிற்சியும் முயற்சியும் கொண்டு உழைத்தால் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியும் . மாணவர்கள் பள்ளிக்கு தினமும் வர வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு பயில வேண்டும். ஏழை எளிய மாணவர்கள் என்ற பாராபட்சம் இன்றி அனைவருடனும் பழகி பள்ளிக்கும், தங்களுக்கும் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கும் , அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு 95% தேர்வு விழுக்காட்டினை பெற்றுத் தந்த இருபால் ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறை பட்டதாரி ஆசிரியர் ஆர்.செல்வகுமார் ஒருங்கிணைப்பு செய்து தொகுத்து வழங்கினார்.