நாகர்கோவில் பிப் 8
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடியை நாட்டிலேயே மிகவும் வலுவான தலைவர், டிரம்ப்ம், பிரதமர் மோடியும் நண்பர் என்றெல்லாம் மதவாதக் கும்பல் கதை அளந்தது. ஆனால் அவை அத்தனையும் பொய். பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு, கோழைத்தனத்தின் உருவம் எனத் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.
இந்தியர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. இந்தியர்கள் இப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்ட போதும் வாய்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கும் மோடி அரசுக்கு அதைக் கண்டிக்கக் கூட மனம் வரவில்லை. இந்த மோடியை பார்த்துதான் உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என வலதுசாரிகள் தாங்களாகவே, தங்களுக்குள் சொல்லிக் கொள்வது பெரும் நகைப்புக்கு உரியது.
ஆனால் பாராளுமன்றத்தில் இதுகுறித்து இந்தியா கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பியதால், நிர்பந்தத்தின் பெயரில் பதில் சொன்ன வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், “சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிது அல்ல. “என்று அமெரிக்கா நாட்டுப் பிரஜை போல, அமெரிக்கா நாட்டின் செயலுக்கு வக்காலத்து வாங்குகிறார். இப்போது இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருக்கும் இந்தியர்கள் 40 மணி நேரம் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் கப்பலில் கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டவர்களை சிறுநீர் கழிக்கக்கூட கழிப்பிடத்திற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் மோடியும், அவரது சகாக்களும் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை. அவர்களுக்கு திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க முயலும் அஜெண்டாவிற்கே நேரம் இல்லை! அமெரிக்க நாட்டின் வளர்ச்சியில் பங்களித்த அந்த இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் என ஏன் மோடியால் சொல்லக்கூட முடியாதா? அவர்களை தனி விமானம் அனுப்பி மீட்கும் நிலைகூட இந்தியாவில் இல்லையா? இங்கே, தேசத்தின் பொதுத்துறை சொத்துக்களை எல்லாம் விற்றுவருகிறது பாசிச பாஜக அரசு.
இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை. அதனால் தான் அமெரிக்காவிற்கே இவர்கள் சென்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதைக் காற்றில் பறக்க விட்டதுதான் இந்த அவலங்களுக்குக் காரணம்! இப்போதும் மோடி வகையறாக்களின் மெளனமே இந்தியர்களைக் காயப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் நெடுந்தூரம் இந்தியர்கள் பயணிக்க வைக்கப்பட்டு இருப்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் மோடி அரசுக்கு இந்தியர்கள் மீது கரிசனமும் இல்லை. அமெரிக்காவைக் கண்டிக்கும் துணிச்சலும் இல்லை. உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி உறுத்தவே இல்லையா மோடி?”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.