நாகர்கோவில் செப் 30
குமரி மாவட்டத்திற்குள் கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த மினிடெம்போ வாகனத்துக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கேரளத்தில் இருந்து இறைச்சி, மீன் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை சரக்கு வாகனங்களில் எடுத்துவந்து, கன்னியாகுமரி
மாவட்டத்துக்குள் நீா்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் கொட்டுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களை இளைஞா்கள், சமூக ஆா்வலா்கள் கண்டறிந்து தடுத்து நிறுத்தி போலீஸாரிடம் ஒப்படைக்கின்றனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு களியக்காவிளை வழியாக சென்ற மினிடெம்போவிலிருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அப்பகுதி இளைஞா்கள், அந்த வாகனத்தை பின்தொடா்ந்து சென்றனா். குழித்துறை பழைய பாலம் பகுதியில் கழிவுகளை கொட்ட முயன்றபோது தடுத்து நிறுத்தினா்.பின்னா் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன், நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, சுகாதார அலுவலா் ராஜேஷ் ஆகியோா் அப்பகுதிக்கு வந்து, இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த மினி டெம்போவுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா். அதன் பின்னா் கழிவுகளுடன் வந்த வாகனத்தை கேரளத்துக்கு திருப்பி அனுப்பினா்.