மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன இலந்தை குளம், தண்டலை, அழகாபுரி, தேவசேரி, அகோவில்பட்டி கிராமப்பகுதிகளில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டப்பணிகள் செயல்பாடு குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா தெரிவித்துள்ளதாவது.. சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் சாகுபடி செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர. உற்பத்தி அதிகரிப்பிற்கென அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் 2024-2025-ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாயில், 22 இனங்களுடன் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும். மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி மண்ணின் வளம் பெருக்குவது பசுந்தாளுரப் பயிர்கள்” இதன் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024 2025-ஆம் ஆண்டில் 2 இலட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 1,000 மெட்ரிக் டன் அளவில் 50 சதவிகித அரசு மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.