நித்திரவிளை , ஜன- 22
நித்திரவிளை அருகே செம்மான்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் ராபின் எட்வர்ட் (39). குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது பெரியப்பா மகன் ரெஜி என்பவருக்கும் அதே பகுதி சேர்ந்த ஈவன் ஜெறி ( 28) என்பவருக்கும் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. இதனால் ஈவன் ஜெறி மீது களியக்காவிளை, நித்திரவிளை ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரெஜிக்கு ராபின் எட்வர்ட் சட்ட உதவி செய்துள்ளார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஈவன் ஜெறி வக்கீல் ராபின் எட்வர்ட்டை காணும்போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வக்கீல் ராபின் எட்வர்ட் மங்காட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு பைக்கில் வந்த ஈவன் ஜெறி வக்கீலை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக வக்கீல் ராபின் எட்வர்ட் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஈவன் ஜெறியை கைது செய்தனர்