நாகர்கோவில், ஜன. 8 –
கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை, நாகர்கோவிலில் மேம்பட்ட லேப்பரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அரிய கணையக் கட்டி வெற்றிகரமாக நீக்கம் செய்யப்பட்டு நோயாளர் குணமடைந்தார்.
இன்சுலினோமா என்பது கணையத்தில் உருவாகும் அரிய எண்டோக்ரைன் கட்டியாகும். இது அதிக அளவில் இன்சுலின் சுரப்பை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் ரத்தச் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglycaemia) ஏற்பட காரணமாகிறது. இது கண்டறியப்படாமலோ அல்லது சரியான சிகிச்சை அளிக்கப்படாமலோ இருந்தால், மயக்கம், வலிப்பு, நினைவு இழப்பு மற்றும் நிரந்தர நரம்பு பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தலாம். முழுமையான குணமடைய ஆரம்ப கட்டத்திலேயே சரியான கண்டறிதலும், சிறப்பு அறுவை சிகிச்சையும் மிகவும் அவசியம்.
சமீபத்தில், கணைய இன்சுலினோமா என கண்டறியப்பட்ட ஒரு இளம் நோயாளிக்கு, கிம்ஸ் ஹெல்த் , நாகர்கோவில் மருத்துவமனையில் மேம்பட்ட குறைந்த காயப்படுத்தும் (Minimally Invasive) அறுவை சிகிச்சை முறையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. விரிவான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் படப்பிடிப்பு சோதனைகளுக்குப் பிறகு, நோயாளிக்கு மண்ணீரலை பாதுகாக்கும் நுண்துளை டிஸ்டல் பான்க்ரியாடெக்டமி என்ற உயர் நுணுக்கம் தேவைப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த மேம்பட்ட அறுவை சிகிச்சை, குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் ரஜீஷ் செல்வகணேசன் தலைமையில், நுண்துளை அறுவை சிகிட்சை நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் பாலா வித்யாசாகர், மயக்கவியல் நிபுணர் டாக்டர் பாலாஜி, மற்றும் உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் ஹென்னித் ராஜ் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. குறிப்பிடத்தக்க ரத்த இழப்பு ஏற்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளர் எந்த சிக்கலும் இன்றி விரைவாக குணமடைந்து, ஐந்தாம் நாளில் நல்ல உடல் நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
மண்ணீரலை பாதுகாக்கும் கணைய அறுவை சிகிச்சை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கும் முக்கிய தன்மையைக் கொண்டது; அதே நேரத்தில் கட்டியை முழுமையாக அகற்றுவதையும் உறுதி செய்கிறது. இந்த வெற்றிகரமான சிகிச்சை, கன்னியாகுமரி மாவட்டத்திலேயே மேம்பட்ட லேப்பரோஸ்கோபிக் கணைய அறுவை சிகிச்சை வசதிகள் கிடைப்பதை எடுத்துக்காட்டுகிறது; இதனால் நோயாளிகள் இத்தகைய சிக்கலான சிகிச்சைக்காக தொலைதூர மாநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை.
கிம்ஸ் ஹெல்த், நாகர்கோயில் மருத்துவக் குழு, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென் தமிழ்நாட்டின் அருகிலுள்ள மாவட்ட மக்களின் தொடர்ந்த நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளது. அரிய மற்றும் சிக்கலான கணைய நோய்களுக்கும் இப்போது நாகர்கோயிலிலேயே பாதுகாப்பாகவும், திறம்படவும் சிகிச்சை அளிக்க முடியும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய செவிலியர்கள், அறுவை சிகிச்சை அறை பணியாளர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு குழு மற்றும் அனைத்து ஆதரவு பணியாளர்களுக்கும் அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
இந்த சாதனை, கிம்ஸ் ஹெல்த், நாகர்கோயில் மருத்துவமனையில் உலகத் தரத்திலான, நோயாளி மையப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை சேவைகளை வீட்டிற்கு அருகிலேயே வழங்கும் முயற்சியில் இன்னொரு முக்கிய முன்னேற்றமாகும்.



