நாகர்கோவில், டிசம்பர் 2 –
குமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியை சேர்ந்தவர் நித்தியா (25). இவர் இன்று காலை தனது தாயுடன் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்து, பெண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறு காரணமாக எனது கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். நான் எனது தாயார் பராமரிப்பில் இருந்தேன்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வாழ பலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்தோம். என்னுடைய குடும்ப நிலைகளை கேட்டு அறிந்தவர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும், முதல் குழந்தையுடன் என்னை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். நானும் அவரது ஆசை வார்த்தைகளை முழுமையாக நம்பினேன்.
இதை அடுத்து நாங்கள் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம். அதன் பிறகு தான் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது எனக்கு தெரியவந்தது. இந்த விவகாரம் எனக்கு தெரிய வந்த சமயத்தில் நான் கருவுற்று இருந்தேன். பின்னர் கருவை கலைத்தேன். இது தொடர்பாக இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
விசாரணையில் அவர் என்னுடன் வாழ விரும்புவதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்வதாகவும் தெரிவித்தார். நானும் அதை நம்பி அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று மீண்டும் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். நாங்கள் ஒன்றாக பழகி வந்த சமயத்தில் என்னிடமிருந்து வங்கி கடன், நகை கடன், என்னுடைய சம்பளம் என ரூ.15 லட்சம் வரை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நான் இரண்டாவது முறையாக கருவுற்று கடந்த 11ம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் அவரது நடவடிக்கை மாறியது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்தேன். அப்போது போலி முகவரியை உருவாக்கி என்னைப் போன்று விவாகரத்து பெற்று வாழும் பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்து நான் கேட்டபோது அவரும் அவரது தாயாரும் என்னை ஆபாசமாக பேசி அடித்து வெளியே அனுப்பி விட்டனர். குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது நான் மிகுந்த மன வேதனை அடைந்து உள்ளேன். எனது குழந்தைகளும் தற்போது நீதி கிடைக்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னைப் போன்று பல பெண்களை ஏமாற்றிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிப்பதற்கு பிறந்து ஒரு மாதம் ஆன தனது குழந்தையுடன் அவர் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


