மார்த்தாண்டம், ஜன. 19 –
அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. காரோடு பகுதியில் அறைகளில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ரப்பர் சீட்டுகள், 2 பைகள் அடுத்தடுத்து திருட்டு போனது. இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த வகையில் நேற்று காரோடு பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த நபரிடம் விசாரித்துள்ளனர். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து பைக்கில் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். பொதுமக்களும் சுதாரித்துக் கொண்டு பைக்கில் துரத்தி சென்று அருமனை மாங்கோடு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்த அருமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர் திற்பரப்பு பகுதி சேர்ந்த ஜெகன் என்ற அச்சுதன் (40) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் கூறுகையில்: ஜெகன் என்ற அச்சுதன் மீது கடையாலுமூடு, பூதப்பாண்டி காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகளும், குலசேகரம், திருவட்டாறு, அருமனை காவல் நிலையங்களில் 250 கிலோவிற்கு மேற்பட்ட ரப்பர் சீட்டு திருட்டு, மஞ்சாலுமூடு பகுதியில் வீடுகளை உடைத்து நகை பணம் திருட்டு என மொத்தம் 64 வழக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு மாதங்கள் முன்பு சிறையில் இருந்து ஜெகன் வெளியே வந்துள்ளார். ஆனாலும் திருட்டை கைவிடாதவர் இரவில் முகமூடி, ஹெல்மெட் அணிந்து கொண்டு தொடர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதை அடுத்து போலீசார் ஜெகன் அச்சுதனை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை குழித்துறை மஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, கோர்ட் உத்தரவின் பேரில் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.



