கன்னியாகுமரி, நவ. 17 –
சபரிமலை அய்யப்பன் மண்டல பூஜை சீசன் இன்று (நவம்பர் 17) முதல் தொடங்கி ஜனவரி 20 வரை 65 நாட்கள் நடைபெறுகிறது. இக்காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை புரிவார்கள். இதனை முன்னிட்டு நகராட்சி, மாவட்ட காவல்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் IPS கன்னியாகுமரிக்கு வந்து திரிவேணி சங்கமம், கடற்கரை சாலை, காட்சி கோபுரம், சீரோ பாயிண்ட், கார்பார்க்கிங், ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தினமும் 150 பேர் வீதம் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுவார்கள். இதில் 120 சட்டம் ஒழுங்கு போலீசாரும், 30 போக்குவரத்து போலீசாரும் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி தெரிந்த போலீசார்களும் நியமிக்கப்படுகிறார்கள்” என்றார்.
தற்போது நான்கு இடங்களில் கார் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப பார்க்கிங் வசதி அதிகரிக்கப்படும். ரோந்து நடவடிக்கையை வலுப்படுத்தும் வகையில் 3 இருசக்கரமும் 3 நான்கு சக்கரமும் கொண்ட புதிய ரோந்து வாகனங்கள் சேர்க்கப்படுகின்றன.
திரிவேணி, கடற்கரை சாலை, சீரோ பாயிண்ட் உள்ளிட்ட நான்கு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நகரம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 புதிய கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
அவருடன் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.



