நாகர்கோவில், டிசம்பர் 18 –
ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் மேற்படிப்பிற்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் அழகு மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் அழகுமீனா ஆசிரியர்களுடன் மீளாய்வு மேற்கொண்டு பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வினை மாணவ மாணவியர்கள் எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கவும் 12ம் வகுப்பு முடித்த பின் மாணவ மாணவியர்களை சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திட வேண்டியும் பல்வேறு முன்னெடுப்புகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ், ஆங்கிலம், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மேற்படிப்பு பயில்வதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நமக்காக மட்டுமில்லாமல், உங்களின் கீழ் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் மேற்படிப்பிற்கு உந்துதலாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் சௌந்தரராஜ் (மார்த்தாண்டம்), ஜெயராஜ் (நாகர்கோவில்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


