மார்த்தாண்டம், டிச. 20 –
மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் பிரபுசுந்தர் மனைவி விஜிலா (39). மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் விஜிலா மற்றும் காவலர் சுப்புராஜ் ஆகியோர் பளுகல் அருகே உள்ள தோலடி சோதனை சாவடியில் ஆய்வு பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார் (43) என்பவர் வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து விஜிலா திலீப் குமார் வந்த வாகனத்தை நிறுத்தி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது திலீப் குமார் திடீரென எட்டு விஜிலாவின் அருகே சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜிலா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த திலீப் குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
இது குறித்து விஜிலா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆபாசமாக பேசி தகராறு செய்த திலீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


