மார்த்தாண்டம், டிச. 9 –
நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (46). வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி ஊருக்கு வந்தார். அப்போது தனது 4 பவுன் செயினை கழுத்தில் போட மனைவி ஸ்ரீஜாவிடம் கேட்டுள்ளார். அப்போது உறவினர் ஒருவரிடம் செயினை கொடுத்ததாகவும் அதை திரும்ப வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜூலை 1ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ஸ்ரீஜா தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து வடிவேல் தன் வீட்டில் இருந்த 35 பவுன் நகைகளையும் தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மாயமானது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கொடுத்தது வடிவேலுக்கு தெரிய வந்தது.
இது குறித்து கடந்த ஜூலை 27ம் தேதி நித்திரவிளை போலீசில் வடிவேல் புகார் செய்துள்ளார். அதன்படி போலீசார் கடந்த 4 மாதங்களாக விசாரித்து வருகின்றனர். அதே வேளையில் நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்கவில்லை.
வடிவேலுக்கு 15 வயதில் ஒரு மகள், 12 வயதில் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளதால் பிள்ளைகள் நலன் கருதி நகை பணத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அவர் வெளிநாடு போகவில்லை. ஆகவே நித்திரவிளை போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.


