நாகர்கோவில், நவம்பர் 22 –
குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் காவல்துறை பணி மட்டுமின்றி பல்வேறு சமூக சேவை பணிகளிலும் போலீசாரை ஊக்கப்படுத்தி வருகின்றார். போலீசருக்கான தேவைகள், கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. ஏற்கனவே இலவச மருத்துவ முகாம்கள், காவல்துறையினருக்கான சிறப்பு அங்காடி உள்ளிட்டவை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் போலீசாரிடம் நடந்த குறைதீர் கேட்பு நிகழ்ச்சியின் போது, ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் குடும்பத்தினருக்கான குழந்தைகள், பெண்களுக்கு இலவச டிரைவிங் பயிற்சி கொடுத்து லைசென்ஸ் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் வாகனத்தின் மூலம் போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், 18 வயது நிரம்பிய பிள்ளைகளுக்கு டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு டிரைவிங் பயிற்சி பெற்ற 20 பேருக்கு லைசென்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிரைவிங் லைசன்ஸ் அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வாகனங்கள் ஓட்டும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை இயக்கக் கூடாது. நாம் செல்ல வேண்டிய திட்டத்திற்கு திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு சென்று விட வேண்டும் என்றார்.



