கருங்கல், டிச. 9 –
கருங்கல் அருகே மிடாலம் கடற்கரை பகுதியில் உள்ள தேவாலயத்தின் தெற்கு பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனவர்கள் வலையை இழுக்க முடியாத வகையில் அவதிப்பட்டனர். இதனால் அதிக அளவில் மீன் சிக்கியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வலையை கரைக்கு இழுத்தனர்.
கரைக்கு வந்தபின் அந்த வலையில் சுமார் 15 அடி நீளமுள்ள திமிங்கலம் இறந்த நிலையில் சிக்கி இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்ததும் மிடாலம் மட்டுமின்றி சுற்றுவட்டார கடற்கரை கிராம பகுதிகளில் உள்ள மீனவர்கள் அங்கு திரண்டனர். இது குறித்து கருங்கல் காவல் நிலையத்திற்கும், கடலோர காவல் படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குமரி கடல் பகுதிகளில் திமிங்கலம் இருப்பது இல்லை. ஆனால் இலங்கை கடல் பகுதியில் அதிகமாக திமிங்கலங்கள் உண்டு. எனவே தற்போது உருவான புயல் காரணமாக இலங்கை கடல் பகுதியில் இருந்து இறந்த நிலையில் திமிங்கலம் ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த 10 வருடங்களுக்கு முன் இந்த பகுதியில் திமிங்கலம் சிக்கியது. அதன் பின்னர் இப்போதுதான் சிக்கி உள்ளது என அந்த பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.



