குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், உயர் கல்வியை தொடர்வதற்காக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த கல்லூரிகள் பங்கு பெறும் உயர் கல்வி வழிகாட்டி முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் (5,6) ஆகிய இரு நாட்கள் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது.
5ம் தேதி (நாளை) பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளை சேர்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில் அக்கல்லூரிகளில் சேர்வதற்கான கட்டணம், கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம், கல்லூரிகளில் பய பயின்றவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகள் ஆகியவை மாணவர்களின் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. 6 ம் தேதி செவ்வாய் அன்று மாலை 5 கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள் மற்றும் பாரா மெடிக்கல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த அரங்குகளில் சம்பந்தப்பட்ட உயர் கல்வியை படிப்பதன் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் வேலை வாய்ப்புகள், மாணவர்களுக்கு கிடைக்கின்ற உதவி தொகைகள், மாணவர்கள் வங்கி கடன்களை பெற்றுக் கொள்ள தேவையான வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்களின் சிறப்பு அம்சங்கள், கல்வி நிறுவனங்களால் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகின்ற பயிற்சிகள் முதலான வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு அரங்குகளின் வழியாக அளிக்கப்பட உள்ளன.
எனவே 12-ம் வகுப்பு தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல விரும்பும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறந்த உயர் கல்வி பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.