மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்
தெற்கு ரயில்வே மேலாளருக்கு ராஜா எம்எல்ஏ கோரிக்கை.
நூற்றாண்டுகளாக தென்காசி வழியாக இயங்கிய நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தென்காசி வழியாக மீட்டர் கேஜ் காலத்தில், இயக்கப்பட்ட மிக முக்கிய ரயில் சேவைகளான நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்டம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி, மற்றும் கேரளாவின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிர்நாடியாக இருக்கும். மேலும் அன்றாட பயணிப்போர், கல்வி, வணிகம், மருத்துவம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கு இந்த நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் மிக முக்கிய பங்காற்றும். மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு பொருளாதாரம் மேம்பாட்டுக்கும் மிக முக்கிய பங்காற்றும்.
எனவே தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை – கொல்லம் இடையே தென்காசி வழியாக மூன்று ஜோடி ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததது.