திருப்பூர், ஜனவரி 05 –
திருப்பூர் மாநகர் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் பாறை குளிகள் நிரம்பியதால் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பை குவிந்து கிடக்கும் இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 55 வது வார்டு முத்தையன் கோவில் நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் எனவே அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற திமுக உறுப்பினர் செல்வராஜிடம் புகார் தெரிவித்தனர்.இதை அடுத்து அவர் இன்று காலை குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த முத்தையன் கோவில் நகர் பகுதிக்கு சென்றார். அங்கு மலை போல் குவிந்து கிடந்த குப்பைகளுக்குள் இறங்கி ஆய்வு செய்த அவர் உடனே அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரியிடம் வலியுறுத்தினார்.
குப்பைகளை அகற்றினால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் பொதுமக்களும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்பூர் மாநகரில் குப்பை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்று திமுக எம்.எல்.ஏ. வே போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



