மார்த்தாண்டம், பிப்- 22
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜா ஆகியோர் நேற்று இரவிபுதூர் கடை என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை துரத்தி சென்றனர். இதை பார்த்த டிரைவர் காரை வேகமாக ஓட்டி சென்று இறுதியில் மார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியில் வைத்து காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
தொடர்ந்து அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதை அடுத்து அதிகாரிகள் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, பின்னர் அரிசியை காப்புக் காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அரிசி கடத்தல் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.