நாகர்கோவில் மார்ச் 21
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 197 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார். மண் புழுவால் செறிவூட்டப்பட்ட நீரினை தயாரிக்கும் முறைகள் குறித்த காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் மரக்கன்றுகள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் விதைகள் விவாசயிகளுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கால்வாய் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு ஜூன் 1-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.
தென்னை கருத்தரங்கு தோட்டக்கலைத்துறை மூலம் ஏப்ரல் மாதம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புகார்கள் குறித்து மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.