தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழாவை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
குற்றாலத்தில் கிராமிய நிகழ்ச்சிகளோடு தொடங்கிய சாரல் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள எழில் மிகு குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். அப்போது குற்றாலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சீசன் களைகட்டிய நிலையில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியினை குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
விழாவின் போது நாதஸ்வரம், தவில், சிலம்பம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை சார்பில் மலர் மற்றும் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், கோட்டாட்சியர் லாவண்யா உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.