நாகர்கோவில் ஆக 23
அரசு விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட முந்தைய ஆட்சியா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அண்மையில் உத்தரவிட்டது மட்டுமல்லாமல் மாவட்ட நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.
குமரி மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் வா்கிஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கல்குளம் வட்டம், கப்பியாறை கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023 ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அலுவலா்கள் எனக்கு அனுமதி அளித்தனா். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல் குவாரிகள் செயல்படுவதாக பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல வழக்கு தொடுத்தனா். இதை விசாரித்த நீதிமன்றம், கல் குவாரிகளை அலுவலா்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதில், எனது கல் குவாரி, குடியிருப்புப் பகுதியிலிருந்து 300 மீட்டருக்குள் இருப்பதாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்ட உரிமத்தை அலுவலா்கள் ரத்து செய்தனா். இந்த உத்தரவுக்குத் தடை விதித்து மீண்டும் கல் குவாரிக்கான உரிமத்தை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு கல் குவாரி உரிமச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருந்துள்ளன. எனவே, அங்கு கல் குவாரி தொடா்வதை அனுமதிக்க முடியாது. மனுதாரரின் கல் குவாரி உரிமத்தை ரத்து செய்த அலுவலா்களின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.
அதேநேரம், மனுதாரா் மீது எந்தத் தவறும் இல்லை, உண்மையை மறைக்கவும் இல்லை. கல் குவாரிக்காக இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருள்களை அவா் வாங்கியுள்ளாா். குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், அவருக்கு பெரும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலா்கள் தவறு செய்ததால், மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது.எனவே, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இதை, தொடா்புடைய அலுவலா்களிடமிருந்து தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம்.
இந்த வழக்கில் தவறிழைத்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் இல்லாமல் அதிகாரிகள் பாா்த்து கொள்ள வேண்டும் என்றாா் நீதிபதி.