குலசேகரம், பிப்- 26
குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் புகுந்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ரப்பர் கழகம் குற்றியாறு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் கன்றுகள் உட்பட ஒன்பது மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது மாடுகளின் அலறல் சத்தம் கேட்ட நிலையில் தொழிலாளர்கள் ஓடி சென்று பார்த்தபோது, ஒரு கன்று குட்டி கழுத்திலும் தொடையிலும் காயம் பட்ட நிலையில் அலறி துடித்துக் கொண்டிருந்தது. ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறி விட்டு தப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் சிகிட்சை அளித்து தொடர்ந்து கவனித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று கன்றுகுட்டி இறந்தது. இது குறித்து உரிமையாளர் செல்வகுமார் (40 ) என்பவர் வனத்துறை அதிகாரிகளும் புகார் அளித்துள்ளார். புகாரில் சிறுத்தை அல்லது ஏதோ ஒரு விலங்கு கன்று குட்டியை கடித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் வனச்சரக அலுவலர் விஜயகுமார் கூறுகையில், – சிறுத்தை தாக்கியதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், அந்த பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் உள்ளதால், செந்நாய் கடித்திருக்கலாம் என என கூறினார். மேலும் மாவட்ட வன அலுவலரின் ஆலோசனைப்படி அந்த பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.