அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய செயற்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் மற்றும் நாஞ்சில் பாலு, வழக்கறிஞர் கோமல் வினோத் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை சாலையில் தீயிட்டு பாஜகவினர் எரிக்க முயற்சித்தபோது அங்கிருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



